நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், தலைநகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தப் பதற்றத்திற்கு முக்கியக் காரணம், ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பு சார்பில் நடத்தப்படும் பிரம்மாண்ட போராட்டம்தான். நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும், இன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ‘சலோ சன்சாத்’ முற்றுகைப் போராட்டத்தை அந்த அமைப்பு அறிவித்திருந்தது.
டெல்லி காவல்துறை இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சச்சின் சர்மா தனது சமூக ஊடகப் பக்கத்தில், “இந்தப் போராட்டத்திற்கு எந்த அனுமதியும் கோரப்படவில்லை, வழங்கப்படவும் இல்லை” என்று தெளிவாகத் தெரிவித்தார். உதவி போலீஸ் கமிஷனர் அஜய் சர்மா பிறப்பித்த அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் தவிர பிற பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் லத்தி, கம்பு, பதாகை உள்ளிட்ட எந்த ஆயுதங்களையும் கொண்டு செல்லக் கூடாது. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கோஷங்கள் எழுப்புவது, உரையாற்றுவது போன்றவை கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது ‘பாரதிய நியாய சன்ஹிதா’ பிரிவு 223-ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், லடாக் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் ஜந்தர் மந்தரில் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் மற்றும் அதிரடிப் படையினர் நாடாளுமன்றத்தை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே NEET முறைகேடுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக டெல்லியின் போக்குவரத்து சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.
