அதிமுகவை போல திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவில்லை என்பதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆர் எஸ் பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
திமுக பொறுத்தவரை இது போன்ற அச்சுறுத்தல் எல்லாம் பார்த்து பயப்படும் கட்சி அல்ல… மிசாவை பார்த்தவர்கள் நாங்கள். ஒருவரை விமர்சிப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் சகிப்பது தன்மை வேண்டும் இன்று இருக்கும் ஆளும் கட்சிக்கு அது இல்லை என்றார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்கள். திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படி செல்லவில்லை. அதனால்தான் இப்படி கைது நடவடிக்கை எடுப்பதாக விமர்சித்தார்.
வழக்கு போடலாம், ஆனால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஒருவர் தப்பி ஓடினால் கைது செய்யலாம். சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது , நாங்கள் சட்டத்தின் படி அனைத்தையும் சந்திப்போம் என்றார்.
திமுகவைத் தவிர இந்த ஆட்சியை விமர்சிக்க யாரும் இல்லை எனக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, எல்லோருக்கும் அவர்களிடம் சென்று விட்டார்கள். திமுகவை வழக்கு போட்டு ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் அது எல்லாம் ஒரு காலத்திலும் நடக்காது என உறுதிபடக் கூறினார்.
இன்று தமிழகத்தில் கொலை கொள்ளை நடைபெறுகிறது. காவல்துறை அதன் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதை மட்டும் செய்து வருகிறது. பாதிக்கப்படுவார்கள் வழக்கு போடட்டும்… விஜய் பாதிக்கப்பட்டால் வழக்கு போட வேண்டும் என்றார்.
இன்று மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இருப்பதாகக் கூறியவர், ஜனநாயகன் படம் ரிலீஸ் அன்று எல்லோரும் போய் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு விடுமுறை கூட விடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஏகடியம் பேசினார்.
