டெல்லியில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள், தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர் நலன் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி  சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றதைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த மோதலில் பல காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், சி.ஜே.பி. நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், காவல்துறையினரை தாக்குதல், பாதுகாப்பு வளையத்தை மீறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக கூடுதல் நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளது.

போராட்டம் என்ற பெயரில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இனியும் இதேபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய நடவடிக்கையை கண்டித்து காக்ரோச் ஜனதா கட்சி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version