சென்னை எழும்பூரில், நீட் தேர்வை எதிர்த்து நீலம் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர்கள் பா.ரஞ்சித், அமீர், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்துள்ள மாணவர் போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். “ஒரு நாட்டில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த நாட்டின் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்பதற்கே அது அடையாளம். மாணவர் போராட்டம் என்பது அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது” என்றார்.

நீட் தேர்வின் தாக்கத்தை தனது நண்பர்களின் குடும்பங்களிலேயே நேரடியாகக் கண்டுள்ளதாகக் கூறிய அவர், “என்னுடைய நண்பரின் மகன் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் முதல் ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெறும் பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை. நல்ல திறமை கொண்ட மாணவராக இருந்தும் அவரது மருத்துவக் கனவு தடைபட்டுள்ளது. அதேபோல் மற்றொரு நண்பரின் மகளும் ஓராண்டாக வீட்டிலேயே இருந்து நீட்டுக்காக தயாராகி வருகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும், “நீட் தேர்வின் மூலம் நம்மிடமிருந்து மருத்துவக் கல்வியையும், மருத்துவ அறிவையும் முழுமையாகப் பறிப்பதே அவர்களின் நோக்கம். இது மீண்டும் நம்மை அவர்களிடம் கைகட்டி நிற்கும் நிலைக்கு தள்ளும் முயற்சியாக உள்ளது” என குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர வேண்டும் என்றும், அதனை முன்னெடுத்து வரும் செயல்பாட்டாளர்களுக்கு தங்களது முழு ஆதரவும் இருக்கும் என்றும் வெற்றிமாறன் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த நீலம் மாணவர் அமைப்புக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version