உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் என்பது திரைத்துறையில் ஜெர்க்கை ஏற்படுத்தி இருக்கிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு தர்மன் என பெயரிடப்பட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்தின் தலைப்பு அறிமுக விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், தர்மன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது கோலிவுட்டில் ஜெர்க்கை ஏற்படுத்தி இருக்கிறது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிகராக இருந்தபோது நடித்த ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், முழுப் படமும் இணையதளங்களில் வெளியானது. இதற்கு காரணம் இந்தப் படத்தின் எடிட்டராக இருந்த பிரதீப் ராகவின் உதவியாளர்தான் எனக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதே நேரம், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு, பிரதீப்ராகவும் பொறுப்பு எனக் கருதி, திரைப்படங்களில் எடிட்டராக அவர் பணிபுரிய தடைவிதிக்கப்பட்டதோடு, அவர் உறுப்பினராக இருக்கும் தென்னிந்திய சினிமா எடிட்டர்கள் சங்கத்திலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில்தான் பிரதீப் ராகவ் சங்கத்திற்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து தான் பணிபுரிய ஆவண செய்ய கேட்டிருந்தார். இதை பரிசீலித்த சங்கம் அவர் மீதான தடையை ரத்து செய்து ஒழுங்கு நடவடிக்கையையும் வாபஸ் பெற்றது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் எடிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து முன்னதாக இயக்கிய ட்ராகன் படத்தின் எடிட்டரும் இவர்தான் என்பதால், மீண்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஜனநாயகனுக்கு நேர்ந்த கதி தர்மனுக்கும் ஏற்பட்டு விடுமா என திரைத்துறையினர் ஐயம் எழுப்புகின்றனர்.

