ஜூன் 1ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோது, முதலமைச்சராக சித்தராமையா பொறுப்பேற்றார். அப்போதே காங்கிரஸ் உயர்மட்டம், 2½ ஆண்டுகளுக்குப் பிறகு துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என சித்தராமையாவிடம் உறுதிமொழி பெற்றது. அந்த ஒப்பந்தப்படி, சித்தராமையா சுமூகமாக ஆட்சியை நடத்தி வந்தார்.
கடந்த 2025 நவம்பர் மாதத்துடன் 2½ ஆண்டு கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டி.கே. சிவக்குமார் தனக்கு பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பையும், உட்கட்சி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. கட்சி மேலிடம் உரிய நேரத்தில் முடிவெடுக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு சிவக்குமாருக்கு அறிவுறுத்தியது. அதனை ஏற்று அவர் அமைதி காத்தாலும், “பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்து வந்தார். அவரது ஆதரவாளர்களான சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்தனர்.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னரே இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என காங்கிரஸ் உயர்மட்டம் அறிவித்திருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சித்தராமையாவை டெல்லிக்கு அழைத்த காங்கிரஸ் தலைமை, ராகுல் காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனையில் அவரிடம் மீண்டும் வாக்குறுதியை நினைவூட்டியது. சித்தராமையா தனது வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கடந்த 26-ம் தேதி டெல்லியில் இருந்து திரும்பிய சித்தராமையா, நேற்று காலை தனது அமைச்சரவை சகாக்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் சிறப்பு உணவு விருந்தை ஏற்பாடு செய்தார். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இந்த உணர்ச்சிகரமான கூட்டம் மதியம் 12 மணி வரை நீடித்தது. கண்களில் நீர் ததும்ப சித்தராமையா பேசியபோது, அமைச்சர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். “நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி” எனக் கூறிய அவர், ராகுல் காந்தியின் உத்தரவுப்படி ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக அறிவித்தார். மதியம் 2.30 மணிக்கு கவர்னர் மாளிகைக்குச் சென்ற சித்தராமையா, கவர்னர் தாவர்ச்சந்த் கெலாட் இல்லாததால் அவரது செயலாளர் பிரபுசங்கரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்பட பல மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்வின்போது அவருடன் இருந்தனர். பின்னர் கவர்னர் திரும்பியதும் ராஜினாமா ஏற்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி டி.கே. சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அமைச்சரவை மாற்றங்கள் குறித்து விவாதிக்க டி.கே. சிவக்குமார் இன்று டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
இந்த மாற்றம் கர்நாடக காங்கிரஸில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்தராமையாவின் 2½ ஆண்டு கால ஆட்சி மக்கள் நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தியதாக பார்க்கப்படுகிறது. புதிய தலைமையின் கீழ் கட்சி ஒற்றுமையுடன் செயல்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
