பிக்பாஸ் புகழ் ஜூலி, தன்னை பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதனால் மனஉளைச்சலில் இருப்பதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஜூலியை குறிவைத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி வந்தன. குறிப்பாக, கிட்னி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக சிலர் இணையத்தில் பதிவுகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், தன்னை அவதூறு செய்யும் நோக்கில் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு தனது கணவருடன் நேரில் சென்ற ஜூலி, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், “சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் குடும்பத்தினரும் கடுமையான மனவேதனை அனுபவித்து வருகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் அவதூறு தகவல்கள் பரப்பியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது திரையுலகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
