2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னேடுத்து பல்வேறு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
திமுக பொதுக்குழுக் கூட்டம் பெரும்பாலும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் அல்லது சென்னைக்குள் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு இடத்தில் தான் நடைபெறுவது வழக்கம்… ஆனால், 48 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்பு 1977-ஆம் ஆண்டு மே 15-ம் தேதி மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியில் திமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளராக பேராசிரியர் அவர்களும், பொருளாளராக சாதிக் பாட்சா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு பின்பு இப்போதுதான் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு முன்பு நடைபெறக்கூடிய பொதுக்குழுவாக இது அமைந்திருக்க கூடிய நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், திமுக கட்சியின் இளைஞர் அணி, மாணவரணி மகளிர் அணி, மருத்துவர் அணி உள்ளிட்ட சார்பு அணியினர், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என 6,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கக்கூடிய நிலையில் 200 தொகுதிகளுக்கும் மேலாக திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் விரிவாக உரையாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சருக்கு பாராட்டு, மத்திய அரசுக்கு கண்டனம், தேர்தல் பணிகள் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக முதலமைச்சர் சென்னையில் இருந்து 31-ம் தேதி காலை விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதுரை புறநகரில் இருந்து 31-ம் தேதி ’ரோட் ஷோ’ மூலமாக பொதுமக்களை சந்திக்கிறார். தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் முதல் மேயரான எஸ். முத்துவின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
*பொது குழு எற்பாடுகள்*
மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள உத்தங்குடி அருகே பிரதான சாலையை ஒட்டியுள்ள சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் விழா அரங்கில், 10,000 பேரை அமர்த்தக்கூடிய வகையில் குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்கம், மேடையில் மட்டும் 100 பேர் அமரக்கூடிய வகையிலும், 2,000 பேருக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் உணவருந்தக்கூடிய உணவுக்கூடம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
மேலும், விழா அரங்கத்தின் முன்பாக 100 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக அண்ணா அறிவாலயம் போல முகப்பு அமைக்கப்பட்டு உள்ளது.. விஐபிகள், நிர்வாகிகள் என அனைவருக்கும் தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல விஐபிகள், நிர்வாகிகள் என அனைவருக்கும் தனித்தனியாக பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கடுப்படுத்த, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.