முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை தி.மு.க. எம்பி கனிமொழி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 20-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அவரது பேச்சில் முதலமைச்சர் விஜய்யை அவதூறாக குறிப்பிட்டதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.

மனுவை விசாரித்த நீதிபதி, “எம்எல்ஏவாக இருக்கும் ஒருவர் இப்படி பேசலாமா?” என்று கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தார். அதன் பின்னர் 90 நிமிடங்களுக்குள் போலீசார் அவரை கைது செய்தனர். தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில், “தவெக அரசின் காவல்துறை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அராஜகமான முறையில் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை இவ்வாறு நடத்துவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இத்தகைய அடக்குமுறைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் அடிபணியாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா என்பது குறித்து தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. தவெக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் செயல்படுவதாகவும், ஜனநாயக மரபுகளை மீறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version