குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணமயமான ‘கலர் அப்பளங்கள்’ தற்போது பலரின் வீட்டு உணவுகளில் இடம்பிடித்துள்ளன. ஆனால், கண்ணைப் பறிக்கும் இந்த நிறங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அபாயம் குறித்து தமிழக உணவு பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான கலர் அப்பளங்களில், தரம் குறைந்த மற்றும் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயன நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனங்கள் உணவோடு சேர்ந்து நம் உடலுக்குள் செல்லும்போது, அவை பல்வேறு ஆரோக்கியச் சிக்கல்களை உருவாக்குகின்றன.
இந்த வகை அப்பளங்களை அடிக்கடி உட்கொள்வதால், செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதுடன், காலப்போக்கில் சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் பெருமளவு பாதிக்கும். இதில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகளில் உள்ள வீரியம் மிக்க வேதிப்பொருட்கள், புற்றுநோய் உருவாகும் சூழலை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
குழந்தைகளுக்கு பேராபத்து: குறிப்பாகக் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுவதுடன், அவர்களின் இயல்பான கவனத் திறனைக் குறைத்து கவனச் சிதறலை உண்டாக்கும். எனவே, குழந்தைகளுக்குத் தெரியாமல் கூட இந்த அப்பளங்களை வாங்கித் தரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
“நிறமூட்டப்பட்ட அப்பளங்கள் தற்காலிகச் சுவையைத் தந்தாலும், அவை உயிருக்கு ஆபத்தானவை. எனவே, பாரம்பரியமான முறையில் உளுந்து மற்றும் அரிசி மாவு கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அப்பளங்களைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது” என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
