பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவி – நவமலை சாலையில் ‘குட்டிக் கொம்பன்’ என்ற ஒற்றைக்காட்டு யானை கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு உலா வருவதால், அந்தச் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வனத்துறை தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் இந்த நவமலை சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் இருசக்கர வாகனங்களிலேயே இப்பகுதி மக்கள் பயணிப்பது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆழியார் கவியருவிக்கு அருகிலுள்ள நவமலை சாலையில் ‘குட்டிக் கொம்பன்’ என்று அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானை ஒன்று ஒய்யாரமாக உலா வந்து கொண்டிருக்கிறது.
சாலையிலேயே முகாமிட்டிருக்கும் இந்த யானையை, யாராவது அச்சுறுத்தும் வகையிலோ அல்லது வம்புக்கு இழுக்கும் வகையிலோ நடந்துகொண்டால், அது கோபமடைந்து பயங்கர சத்தத்துடன் அவர்களை விரட்டத் தொடங்குகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
யானையின் நடமாட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி வனத்துறையினர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி, நவமலை பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தற்காலிகமாக இருசக்கர வாகனப் பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதற்குப் பதிலாக, நான்கு சக்கர வாகனங்கள் அல்லது அரசுப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். யானையை அப்புறப்படுத்தும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
