மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் சற்று தணிந்ததை அடுத்து, உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழலால் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 12) அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான ராணுவத் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டதாக வெளியான தகவலாலும், இரு நாடுகளுக்கு இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டி வருவதாக கூறப்படுவதும் உலக சந்தைகளில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது.

இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,695.40 புள்ளிகள் (2.30%) உயர்வை சந்தித்து 75,527.95 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 75,608.02 புள்ளிகள் வரை சென்று வர்த்தகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  461.30 புள்ளிகள் (1.99%) உயர்ந்து 23,622.90 என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்தது.

முன்னணிப் பங்குகளைக் காட்டிலும் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகள் இன்று கூடுதல் லாபத்தை வாரி வழங்கின. பிஎஸ்இ மிட்கேப் (BSE MidCap) மற்றும் பிஎஸ்இ ஸ்மால்கேப் (BSE SmallCap) ஆகிய இரண்டு குறியீடுகளும் தலா 2.5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version