சென்னை: 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) எழுத்துத் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டது. இந்தத் தேர்வில் பெருமளவில் குளறுபடிகள் நடைபெற்றதாக பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் புகார்கள் எழுந்தன. புகார்களின் அடிப்படையில் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் உமா, சென்னை காவல் ஆணையரிடம் முறையிட்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு (CBCID) போலீசார் வழக்குப் பதிவு செய்து, 156 பேர் மீது குற்றச்சாட்டுகளை அளித்தனர். தேர்வில் இடைத்தரகர்களாக செயல்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழலில் 50 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இன்று காலை முதல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 18 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் திருமங்கலம் 5-வது தெரு எச் பிளாக்கில் வசிக்கும் செந்தில் குமார் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெரவள்ளூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் இடங்களில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் தொடர்பாக விரிவான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த ஊழல் வழக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு நடைமுறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மேலும் பல முக்கிய நபர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version