கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெறும்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அண்மையில் பணியாணைகளை வழங்கியது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்கு அந்தக் கட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

கும்பகோணம் மகாமகம், தருமபுரி பேருந்து எரிப்பு போன்ற கடந்தகால சம்பவங்களிலும் இதேபோன்ற கோரிக்கைகள் எழுவதற்கான வாய்ப்புள்ளது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன், மதுரை வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். கரூர் சம்பவம் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் உள்ளது எனவும், அரசுப் பணி வழங்குவது விசாரணையை பாதிக்கும் எனவும், சாட்சிகளை பாதிக்கும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

போட்டித் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் மட்டுமே அரசுப் பணி வழங்கப்பட வேண்டும் எனவும், கருணை அடிப்படையிலான இந்த நடவடிக்கை அரசியலமைப்பு வழிகாட்டுதல்களுக்கு முரணானது எனவும் வாதிடப்பட்டது. ஜூலை 27ஆம் தேதி நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு விசாரணை நடத்தியது. அரசுத் தரப்பில் இது கொள்கை முடிவு என வாதிடப்பட்டாலும், நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்தது. திறன் பயிற்சி மூலம் வாழ்வாதாரம் உயர்த்தலாம் எனவும், சாதாரண பணி வழங்கியதாகக் கூறுவதை ஏற்க முடியாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

31 பேருக்கு பணி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் ஜூலை 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் மேலும் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version