உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் அழகர் கோயிலுக்கு சேவை செய்வதற்காக 1930ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் சுமார் 1.79 ஏக்கர் நிலம் (அசோக விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம்) தொடர்பான ரூ.60 கோடி மதிப்பிலான மோசடி வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியைச் சேர்ந்த கவிகுமார் (காளிக்குமார் எனவும் அழைக்கப்படுபவர்) பத்திரப்பதிவு நடைமுறைகளில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் ஏற்கனவே புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா மற்றும் முன்னாள் வட்டாட்சியர் (தற்போது ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் உள்ளிட்ட 19 பேர் மீது 420 (மோசடி) மற்றும் 120(B) (குற்றச்சதி) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.1930ஆம் ஆண்டு புதுக்கோட்டை அரசரின் மனைவி துரைராணியால் எழுதி வைக்கப்பட்ட உயிலில், இந்த சொத்து கோயில் பூஜைகள், அறப்பணிகள் மற்றும் உதவித்தொகைகளுக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், விற்பனை அல்லது அடமானம் செய்யக் கூடாது என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 2016ஆம் ஆண்டு முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன் கோயில் பெயரை வருவாய்ப் பதிவேடுகளில் இருந்து நீக்கி, தனியாருக்குப் பட்டா மாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்காலத் தடையை மீறி, 2021 ஏப்ரலில் தூத்துக்குடி முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஜூலை 19 அன்று திண்டுக்கல் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமானப் பத்திரம் பதிவு செய்யப்பட்டதாகவும் புகார் உள்ளது.

முன்னாள் விஏஓ அரசன் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அன்பழகன் மீது துறைரீதியான நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தற்போது தொடர் கைதுகள் நடைபெற்று வருவதால், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. காவல்துறை இரண்டு தனிப்படைகளை அமைத்து, ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவர்களையும் விரிவாக விசாரித்து வருகிறது. கோயில் சொத்துகளை மீட்டெடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version