அதிமுக வெற்றி பெற்றது பாமக போட்ட பிச்சை எனக் கூறிய சி.வி. சண்முகம், அமைச்சரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை என கலசப்பாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கொறடாவுமான அக்ரி.கிருஷ்ணமூரத்தி பதிலடி கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை  தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி  செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;-

சிவி.சண்முகம் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அதிமுகவை பற்றியும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறான கருத்துக்களை சொல்லி கழகத்தில் குழப்பத்தை  விளைவிக்க முற்பட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து சாரை சாரையாக தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்கு சீட்டு கட்டு சரிவது போல் செல்வதாக சொல்வது தவறு.

அதிமுக இயக்கத்தின் உண்மையான தொண்டர்கள்  எடப்பாடியார் தலைமையிலான தொண்டர்கள் யாரும் இயக்கத்தை விட்டு செல்லவில்லை.

அதிமுக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். திமுக தீய சக்தி கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இயக்கம். அதிமுக. ஜெயலலிதா எம்ஜிஆர் ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கு பின்னால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதிமுகவில் இருந்து எந்த ஒரு உண்மையான தொண்டர்களும் செல்லவில்லை. சிவி.சண்முகம் திமுகவோடு சேர்ந்து அதிமுக ஆட்சி அமைக்க முற்பட்டதாக சொல்வது உண்மையான செய்தி அல்ல.

கடந்த 2021 முதல் 2026 வரை தமிழக எதிர் கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது, கடுமையான குற்றச்சாட்டுகளை திமுக மீது முன் வைத்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்பாட்டில் அந்த ஆட்சியிலே நடைபெற்ற தவறுகளை எல்லாம் மக்கள் மத்தியிலே தோலுரித்துக் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி தான்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை உட்பட தொண்டர்கள், நிர்வாகிகள் என யாரும் செயல்படவில்லை என்பதை இன்றைக்கு சிவி சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்த அக்ரிகிருஷ்ணமூர்த்தி அதிமுக திமுகவோடு இணைந்து ஆட்சி அமைப்பதாக தவறான தகவலை கூறுவதாகவும், குதிரை பேரம் நடத்தி ஆட்களை இழுப்பதாகவும் விமர்சித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு இல்லாத போது கூட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாகவும், எந்த தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தட்டு தடுமாறி வெற்றி பெறவில்லை என்பதை சிவி சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியவர், எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை தான் சி.வி. சண்முகத்திற்கு நாடாளுமன்ற சீட்டு கிடைத்ததாகவும் பதிலடி கொடுத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகம் கூட்டணி கட்சியினரை மதிக்கவில்லை அனுசரித்து செல்லவில்லை என குற்றச்சாட்டியவர், அதிமுகவையும் அதிமுக தொண்டர்களையும் இழிவு படுத்தி பேசுவதை சி.வி.சண்முகம் நிறுத்திக் கொள்ளாவிடில், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

சி.வி.சண்முகம் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமி அஞ்ச மாட்டார் எனக் கூறியவர், தமிழக வெற்றி கழகம் சி.வி.சண்முகத்தை இயக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். சி.வி.சண்முகம்  போன்றோரின் கருத்தை கேட்டதுதான் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் எனவும், சட்டத்துறையில் இருந்து கனிமவள துறையை கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தான் என்றும், ஆதவ் அர்ஜுனா ஒரு அமைச்சரே இல்லை ஆள் பிடிக்கும்  வேலையை செய்பவர் எனவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version