செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றி வரும் வேளையில், சென்னையைச் சேர்ந்த 25 வயது இல்லத்தரசி ஒருவர், தனது அன்றாட வீட்டு வேலைகளை வீடியோவாகப் பதிவு செய்து AI நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் கைநிறைய சம்பாதித்து வருகிறார். இந்த விசித்திரமான பகுதிநேர வேலை இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மனிதர்களைப் போலவே செயல்படும் ‘ஹியூமனாய்டு’ (Humanoid) ரோபோக்களை உருவாக்குவதற்காக AI நிறுவனங்கள் மனிதர்களின் நிஜ உலகத் தரவுகளை தேடி வருகின்றன. இதனைப் பயன்படுத்திச் சென்னையைச் சேர்ந்த நாகிரெட்டி ஸ்ரீரம்யாசந்திரா என்ற 25 வயதுடைய இல்லத்தரசி ஒரு புதிய வருமான வழியைக் கண்டறிந்துள்ளார்.

https://x.com/VaibhavSisinty/status/2065387149915299939?

இவர் தனது தலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை மாட்டிக்கொண்டு, காலையில் காபி போடுவது, பழங்களை நறுக்குவது, துணிகளை மடிப்பது போன்ற தனது அன்றாட வீட்டு வேலைகளை வீடியோவாகப் பதிவு செய்கிறார்.

ஒரு நாளைக்குச் சுமார் 90-க்கும் மேற்பட்ட சிறிய வீடியோக்களைப் பதிவு செய்யும் இவருக்கு, இந்த வேலைக்காக மணிக்கு 250 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “வீட்டு வேலை செய்வதற்கு மணிக்கு 250 ரூபாய் யார் தருவார்கள்?” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இவரது வீடியோக்களைக் கொண்டு, மனிதர்கள் எப்படிப் பொருட்களைக் கையாள்கிறார்கள், அன்றாட வேலைகளின் போது அவர்களின் கைகளின் இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு எப்படி இருக்கிறது என்பதை AI நிறுவனங்கள் தங்களது ரோபோக்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் வீட்டு வேலைகளைக் கச்சிதமாகச் செய்யும் ரோபோக்களை உருவாக்க முடியும் என டெவலப்பர்கள் நம்புகின்றனர்.

இதுபற்றி சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. அதாவது இந்த செயலை எதிர்க்கும் பயனர்கள், “நம்முடைய தரவுகளை நாமே கொடுத்து எதிர்கால சந்ததியினரின் வேலைவாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறோம்” என்று  கவலை தெரிவித்துள்ளனர். ஐடி ஊழியர்கள் சாப்ட்வேர் எழுதிக் கொடுத்ததால் இன்று அவர்களின் வேலைக்கே AI ஆபத்தாக மாறியதைச் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இந்தத் தரவுகளுக்கு இன்னும் கூடுதல் சம்பளம் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த செயலுக்கு ஆதரவு தரும் நெட்டிசன்கள் சிலர், இந்த வேலை எந்த நிறுவனம் வழங்குகிறது என்ற ஆர்வத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சிலரோ, ஸ்மார்ட் கிளாஸ்  அணிந்து கொண்டு இதை சமூக வலைத்தளங்களில் ‘லைவ் ஸ்ட்ரீம்’  செய்தால் இதைவிடப் பல மடங்கு சம்பாதிக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளனர்.

வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே இல்லத்தரசி ஒருவர் AI தொழில்நுட்பத்திற்குப் பயிற்சி அளித்துச் சம்பாதிக்கும் இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version