தமிழகத்தில் தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த 2026-27 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களுக்கு மட்டும் பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற 85 நாட்கள் ஆகியும் இதுவரை ஒரு புதிய திட்டம் கூட அறிவிக்கப்படவில்லை என எடப்பாடி சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதே அவரது முக்கிய குற்றச்சாட்டு. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள், முதியோர் உரிமைத்தொகை ரூ.3,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், ஐந்து ஏக்கருக்குக் குறைவான விவசாயிகளின் பயிர்க்கடன் முழுத் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
“வெறும் வசனம் பேசியே ஆட்சியை ஓட்டிவிட்டார்கள். எல்லாவற்றிற்கும் ரீல்ஸ்தான் போடுகிறார்கள்,” என எடப்பாடி தெரிவித்தார். பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 55 ஆயிரம் கோடிக்கு மேலும், நிதி பற்றாக்குறை ஒரு லட்சம் கோடிக்கு மேலும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதை எப்படி சரிசெய்யப் போகிறார்கள் என்பதற்கு அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தவெக அரசு குறுகிய காலத்திலேயே 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும், இது திமுக ஆட்சியில் ஏற்பட்ட கடன் சுமையைப் போன்ற நிலையை உருவாக்கும் என்றும் எடப்பாடி எச்சரித்தார். முந்தைய திமுக அரசு நிபுணர் குழு அமைத்து நிதிநிலையை சரிசெய்வோம் எனக் கூறியபின் ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கியதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய அரசும் அதே பாதையில் செல்வதாகக் குற்றம் சாட்டினார்.
கொரோனா காலத்திலும் அதிமுக அரசு பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதை நினைவுபடுத்திய எடப்பாடி, “ஒரு ரூபாய் வருவாய் இல்லாத நேரத்திலும் நாங்கள் மக்கள் நலனுக்காகப் பணியாற்றினோம்,” எனத் தெரிவித்தார். தவெக அரசின் வாக்குறுதிகள் வெறும் ஏமாற்று வேலை எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலன் சார்ந்த உண்மையான திட்டங்கள் இல்லாத பட்ஜெட்டைக் கண்டித்தார்.
