மதுரை: காவிரி நதிநீர் உரிமைக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றுபட்டு குரல் கொடுக்காத நிலையில், நடிகை திரிஷா தொடர்பான விவகாரத்தில் இரு கட்சிகளும் மோதிக் கொள்வதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டும் கர்நாடக அரசு அதை மறுத்து வருகிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான இந்த விவகாரத்தில் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் உரிய கவனம் செலுத்தாமல், திரைத்துறை நட்சத்திரம் தொடர்பான விஷயங்களில் மட்டுமே சண்டையிடுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவான 126.8 மில்லிமீட்டரை விட 14 சதவீதம் குறைவாக 108.4 மில்லிமீட்டர் மட்டுமே பெய்துள்ளது. இதனால் மாநில அணைகளின் கொள்ளளவு 31.4 சதவீதம் குறைந்துள்ளது.

பாலாறு, காவிரி, பரப்பிகுளம், வைகை, தாமிரபரணி உள்ளிட்ட 90 அணைகளின் கீழ் 14,141 பாசன ஏரிகள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள் உள்ளன. இவை மூலமே வேளாண்மை மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. ஆனால் நீர்மட்டம் குறைந்ததால் விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.இதற்கிடையே அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 30 நாட்களில் ஒரு மூட்டை அரிசி விலை ரூ.300 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளது. முன்பு கிலோ ரூ.50-க்கு கிடைத்த அரிசி இப்போது அதிக விலையில் விற்கப்படுகிறது. ம

க்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள் இவ்வாறு தீவிரமடைந்திருந்தாலும், அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். காவிரி நதிநீர் விவகாரத்தில் திரையுலகப் பிரபலங்களும் முன்னணி நட்சத்திரங்களும் தங்கள் ஆதரவுக் குரலை இன்னும் பதிவு செய்யவில்லை என்றும் அதிமுக தரப்பில் ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் நலனுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், சமூகத்தில் செல்வாக்குள்ள பிரபலங்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் ஆர்.பி.உதயகுமார் திரிஷா குறித்து விமர்சித்திருந்தார். “நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக இருக்கும் நடிகை திரிஷாவை துணை முதல்வராக அறிவிக்கலாம்” என்ற கருத்து தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அவர், “காவிரி தண்ணீருக்காக சண்டை போடுவார்கள் என்று எதிர்பார்த்தால், திரிஷா அண்ணிக்காக சண்டை போடுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்து, அணைகள் வறண்டு, அரிசி விலை உயர்ந்து வரும் இந்த நேரத்தில், நதிநீர் உரிமைக்காக ஒற்றுமையாக போராட வேண்டிய கட்சிகள் இத்தகைய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது மக்களின் நலனுக்கு உகந்ததல்ல என்பதே அவரது முக்கிய குற்றச்சாட்டாகும்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version