எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் மோகனாவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்ததாக எழுந்த சர்ச்சையில், பயணி மற்றும் டிக்கெட் பரிசோதகர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில், டிக்கெட் பரிசோதகர் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் மோகனா மீதும், மோகனா அளித்த புகாரின் அடிப்படையில் டிக்கெட் பரிசோதகர் மீதும் எழும்பூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மோகனா தாக்கல் செய்த மனுவில், நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பேருந்து நிலையம் செல்ல காத்திருந்தபோது, டிக்கெட் பரிசோதகர் தன்னை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக குற்றம்சாட்டி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று செல்போனை பறித்து தாக்கியதாகவும், தற்காப்புக்காக மட்டுமே செயல்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கறிஞர் மோகனாவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
