வனப்பகுதிகளில் மின்சாரக் கோபுரங்கள் மற்றும் மின்கம்பங்களை அமைக்கும்போது காடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மின்வழிப்பாதைகளுக்காக அதிக மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்க்கவும், மின்வழித்தடங்களுக்குத் தேவைப்படும் பரப்பளவைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட உயர் மின் கோபுரங்கள் மற்றும் கம்பங்கள் அமைக்கப்படுவதால், மின் கம்பிகளுக்கு இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வனப்பகுதிகளில் மின்வழிப்பாதையின் அகலத்தை 20% வரை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி, பல்வேறு மின்னழுத்தம் கொண்ட பாதைகளின் அகலங்கள் மாற்றப்பட்டுள்ளன. 220 kV மின் அழுத்தம் கொண்ட பாதைகளின் அகலம் 35 மீட்டரிலிருந்து 30 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. 400 kV மின்னழுத்தம் கொண்ட பாதைகளின் அகலம் 46 மீட்டரிலிருந்து 40 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
765 kV மின்னழுத்த பாதைகளின் அகலமும் குறைக்கப்பட்டுள்ளன, மேலும் அதிகபட்சமாக வனப்பகுதிகளுக்குள் 12 மீட்டர் வரை மின்வழிப்பாதை அகலம் குறைக்கப்பட்டுள்ளது.

