தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி காட்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, துரைமுருகனின் வெற்றியை செல்லாது எனவும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரியும் அதிமுக வேட்பாளர் வி.ராமு 2021ல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ராமு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று துரைமுருகன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சரட்சன் வில்சன், 16வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து, 17 சட்டமன்றம் அமைந்துவிட்ட நிலையில், வாக்குக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத நிலையில் இந்த தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும், இந்த வழக்கில் தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில்  பதிவான வாக்குகளின் எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது; உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத நிலையில், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனவும் வாதிட்டார்.

அதிமுக வேட்பாளர் ராமு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா, 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதை எதிரித்து திமுக வேட்பாளர் அப்பாவு தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் தேர்தல் வழக்கு செல்லக்கத்தக்கதல்ல என கூறமுடியாது; இதில் ஊழல் நடவடிக்கை இல்லை என்று கூறவில்லை; தபால் வாக்குகள் சரியாக எண்ணப்பட்டனவா என்பதை சாட்சிகள் விசாரணை மூலம் இந்த நீதிமன்றம் தான் தீர்மானிக்க முடியும் என்பதால் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட துரைமுருகன் தரப்பு வழக்கறிசர், அப்பாவு தொடர்ந்த வழக்கில் 2019ஆம் ஆண்டில், பேரவையின் பதவிக்காலத்தின்போதே இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததாலேயே அந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version