தமிழக மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதைத் தடுக்க , மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மருத்துவக் கல்வி வளர்ச்சிக்கும், சமூக நீதியை நிலைநாட்டவும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் தனது தலைமையிலான அதிமுக அரசுகள் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 69 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் அதன் முக்கிய எடுத்துக்காட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்.
2011 முதல் 2021 வரை 19 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன், அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் சுமார் 5,500-க்கும் மேல் உயர்த்தப்பட்டதாகவும், ஆனால் 2021-க்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டதால், மாநில அரசுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 600-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் குறையும் என தகவல்கள் வெளியாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இழப்பை ஈடுகட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி கூடுதல் மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், தனியார் கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து வழங்கும்போது மாநில அரசுகளின் இடஒதுக்கீடு பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு மற்றும் யு.ஜி.சி. உரிய சட்ட மற்றும் விதிமுறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
