துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் பெயர் பொறிக்கப்பட்ட .357 மேக்னம் ரிவால்வர் மற்றும் 6 தோட்டாக்களை பரிசாக வழங்கிய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் பாதுகாப்புத் துறை உற்பத்தித் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந்தப் பரிசு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பல நாடுகளின் ஆயுதச் சட்டங்கள் காரணமாக அந்த ரிவால்வர்களை தலைவர்கள் தங்களது நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, “நான் கொடுத்த மேப்பிள் சிரப் பரிசுடன் ஒப்பிடும்போது இது முற்றிலும் வித்தியாசமானது. அந்த துப்பாக்கி தற்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கனடா மக்களுக்கு ஒன்றை உறுதியளிக்கிறேன்; துப்பாக்கிகள் என்னிடம் இருக்காது” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
ஹங்கேரி பிரதமர் பீட்டர் மக்யார், தனது பெயர் பொறிக்கப்பட்ட ரிவால்வர் மற்றும் ஆறு தோட்டாக்கள் அடங்கிய பெட்டியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “நேட்டோ மாநாட்டில் எர்டோகனிடமிருந்து கிடைத்த வித்தியாசமான பரிசு” என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு வழங்கப்பட்ட ரிவால்வர் செயலிழக்கச் செய்யப்பட்டு ராணுவ அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பரிசுடன் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கும் குறிப்பு இருந்ததாக தெரிவித்தார். இருந்தாலும், பிரிட்டன் சட்டப்படி அதை நாட்டுக்குள் கொண்டு வர முடியாததால், அந்த ரிவால்வரை துருக்கியிலேயே ஒப்படைத்தார்.
பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், விமான நிலையத்தை அடைந்ததும் ரிவால்வரை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தார். ஜெர்மன் அதிபர் ஃபிரிட்ரிக் மெர்ஸ் மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுக்கு வழங்கப்பட்ட ரிவால்வர்களும் அங்காராவில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரகங்களில் வைக்கப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு வழங்கப்பட்ட ரிவால்வர், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பரிசுப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. கிரீஸ் அரசு, அந்த ஆயுதம் போர் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தது.
குரோஷியா அதிபர் ஸோரன் மிலனோவிச், “எர்டோகன் எனக்கு துப்பாக்கி பரிசளித்ததை நாடு திரும்பிய பிறகுதான் தெரிந்துகொண்டேன். நான் அதை எடுத்துச் செல்லவில்லை. நான் வேறு வகையான ஆயுதங்களால் சுடுவேன்” என்று அரசியல் பாணியில் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார். அவரது அலுவலகம், அந்த ரிவால்வர் காவல்துறை அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படலாம் என்று தெரிவித்தது.
துருக்கி அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. எனினும், துருக்கி அரசுக்குச் சொந்தமான ஆயுத உற்பத்தி நிறுவனமான MKE தயாரிக்கும் Gumusay .357 Magnum என்ற ஆறு தோட்டாக்கள் கொண்ட ரிவால்வரே பரிசாக வழங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம், ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் அடுத்த தலைமுறை போர் விமானங்கள் உள்ளிட்ட துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் துருக்கியின் பாதுகாப்புத் தொழில்துறையை உலகுக்கு அறிமுகப்படுத்துவதே எர்டோகனின் நோக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனுடன், “தைரியத்தின் அரசியல்: எர்டோகன் மற்றும் துருக்கியின் எழுச்சி” என்ற தலைப்பில் எர்டோகனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டதாக துருக்கியின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
