அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பினை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அர்த்தமுள்ள மற்றும் தீவிரமான விவாதங்களுக்குத் தெஹ்ரான் தயாராகும் வரை வாஷிங்டனுக்கு பேச்சுவார்த்தையில் “எந்த ஆர்வமும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் லெபனான் அதிபர் ஜோசப் அவூன் உடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது ட்ரம்ப் இதனைக் கூறினார்.
பின்வாசல் வழியாக ஈரானிய அதிகாரிகள் தங்களுடன் பேச முயன்று வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் தீவிரமாக விரும்புவதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இதற்கிடையே, ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியன் கூறுகையில், நாட்டின் உச்ச தலைவர் முஜ்தபா காமேனியுடனான தொடர்புகள் தினந்தோறும் அதிகரித்து வருவதாகவும், அவரது அறிவுறுத்தல்களின்படியே அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் 11வது இரவாகத் தொடர்ந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கான அச்சுறுத்தலைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சிகளும் முடங்கியுள்ளன.
ஈரானுக்கு எதிரான இந்தப் போருக்காக அமெரிக்கா இதுவரை 37.5 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். பென்டகனுக்காக 67 பில்லியன் டாலர் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ள நிலையில், இந்தப் போர்ச் செலவு குறித்த விவரங்கள் கங்கிரஸில் நடைபெற்ற விசாரணையின்போது வெளியிடப்பட்டன.
