தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது முன்னதாக 2026 நிதியாண்டு தொடக்கத்திலேயே கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தாமதமானது.

இபிஎஃப்ஓ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பு (CITES 2.01) தளத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. பழைய பிஎஃப் கணக்குகளின் தரவுகள் புதிய தளத்தில் தென்படாதது, லாக்-இன் சிக்கல்கள், மெதுவான செயல்பாடு, உரிமைகோரல் செயலாக்கத்தில் தாமதம் உள்ளிட்ட புகார்கள் சந்தாதாரர்களிடமிருந்து வந்தன. இதனால் புதிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன் தளத்தை முழுமையாக சீர்செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், அதன்பிறகு யுபிஐ இணைப்பு செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.

இந்த வசதி பீம் (BHIM) செயலி மூலம் இணைக்கப்படும். ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகம் (NPCI) உடன் இணைந்து, சி-டாக் (C-DAC) தொழில்நுட்ப ஆதரவுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கை வங்கி கணக்குடன் இணைத்து, அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக (மருத்துவம், கல்வி, திருமணம், வீட்டுத் தேவை போன்றவை) தகுதியான தொகையை விண்ணப்பித்து பெறலாம். தற்போது ஆட்டோ-மோடில் ரூ.5 லட்சம் வரையிலான கோரிக்கைகளுக்கும் குறைந்தபட்சம் மூன்று வேலை நாட்கள் ஆகும் நிலையில், யுபிஐ மூலம் இது மிகவும் விரைவாக முடியும்.

பொதுவாக, மொத்த பிஎஃப் இருப்பில் 50 முதல் 75 சதவீதம் வரை எடுக்க அனுமதிக்கப்படும்; குறைந்தபட்சம் 25 சதவீதம் ஓய்வுகால பாதுகாப்புக்காக வைக்கப்படும். இது கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு அவசர தேவைகளில் பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஃப்ஓ தளத்தை முழுமையாக சீர்செய்து, பாதுகாப்பான மற்றும் விரைவான சேவையை உறுதி செய்யும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version