சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தின் பெயர் ‘பண்டிதர் அயோத்திதாசர் நவீன பேருந்து நிலையம்’ என மாற்றம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) விளக்கம் அளித்துள்ளன.
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு ’கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் பெயரை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக, கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், உண்மைத் தன்மை குறித்துத் தகவல் சரிபார்ப்பகம் ஆய்வு செய்தது.
இது குறித்துச் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றம் செய்ய இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை; அது முற்றிலும் போலியான செய்தி” எனத் தெளிவாக மறுத்துள்ளது.
எனவே, இது போன்ற வதந்திகளையும் போலிச் செய்திகளையும் பொதுமக்கள் யாரும் நம்பவோ அல்லது சமூக வலைதளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
