தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை தனது இரண்டு குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே சிறுபாடு சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியமிக்கேல். லாரி ஓட்டுநரான இவருக்கு சபிதா ரோனிகம் என்ற மனைவியும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள், ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில், மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தைப் பிரிந்து வேறொருவருடன் சென்றதால், மரியமிக்கேல் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது குழந்தைகளுக்குப் பிடித்த உணவை வாங்கிக் கொடுத்து, அவர்கள் உறங்கிய பிறகு, மின்சாரக் கம்பிகளை குழந்தைகள் மற்றும் தனது உடலில் கட்டி மின்சாரத்தை செலுத்தி தற்கொலை செய்துகொண்டார்.
இன்று மதியம் வரை அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை போலீசார் கதவை உடைத்துப் பார்த்தபோது, மூவரும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிரேத பரிசோதனைக்காக உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மனைவி பிரிந்த விரக்தியில் தந்தை எடுத்த இந்த முடிவு அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

