கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டினோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியும், டி.ஆர். காங்கோ அணியும் இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணிக்கு மோதின. ரொனால்டோ இருப்பதால், நிச்சயம் எளிதாக இந்தப் போட்டியை வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் காங்கோ அணி வீரர்கள் களத்தில் சீறிப்பாய்ந்தனர்.
போர்ச்சுகல் அணியின் ஜோவா நோவஷ் ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் கோல் அடித்ததால், அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காங்கோ அணியின் யோனே வைஸா 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. முன்னிலைக்காக இரு அணிகளும் இரண்டாம் பாதியில் மும்முரமாக விளையாடினர்.
காங்கோ அணியின் கோல் கீப்பர் Lionel Mpasi நேற்றைய ஆட்டத்தில் முக்கிய பங்காற்றினார். பெனால்டி பாக்ஸை முழுமையாகக் கட்டுப்படுத்தி, போர்ச்சுகல் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தடுத்து தனது அணியைக் காப்பாற்றினார். நேற்றைய ஆட்டத்தின் கதாநாயகர்களே Defensive Unit இல் விளையாடிய கேப்டன் Chancel Mbemba & Aaron Wan இருவரும் தான். போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை முடக்கியதிலும், போர்ச்சுகலின் மற்ற நட்சத்திர வீரர்களை ஆட்டம் முழுவதும் முடக்கியதிலும் இருவரும் மாஸ் செய்தார்கள். இவர்கள் காட்டிய சிறப்பான தற்காப்பு ஆட்டம் தான் நேற்றைய ஹைலைட்.
நேற்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகப் புகழ்மிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பங்களிப்பு என்பது பெரிதாக இல்லை.
பிரான்சிஸ்கோ கான்செகோவிடமிருந்து பெற்ற பாஸ்களை, கோல் அடிப்பதற்கான நல்ல வாய்ப்புகளில் பயன்படுத்தத் தவறினார். அவர் சில நேரங்களில் பெனால்டி பாக்ஸில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இறுதி நேரங்களில் போர்ச்சுகல் தீவிரமாக போராடியபோதும், கோலை அடிக்க முடியாமல் போனது. இதனால் 1974-க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள டிஆர் காங்கோ, முக்கியமான ஒரு புள்ளியை கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கத்தைப் பதிவு செய்தது.
