கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்றும், தமிழக அரசு நீர் கேட்கவில்லை என்றும் கூறியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், கடந்த 5 ஆண்டுகளாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படாததைச் சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய 9.91 TMC நீரையும், ஜூலை மாதத்திற்குரிய 32 TMC நீரையும் கர்நாடகம் தர மறுப்பதாகத் தெரிவித்துள்ள அவர், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து ஒன்றிய அரசிடம் முறையிட வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் நடப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், எம்.எல்.ஏ.க்களை வாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version