பெரம்பலூர் மாவட்டத்தில் 125 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களிடம், நாளொன்றுக்கு ரூ.50 வீதம் ‘கட்சி நிதி’ வசூலிப்பதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (முன்பு 100 நாள் வேலைத்திட்டம்), தற்போது 125 நாட்களாக நீட்டிக்கப்பட்டு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.450 வரை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.56,250 வரை வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில், இத்திட்டம் நிகழ்ந்த மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தின் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பணித்தளத்திற்கு வரும் குறிப்பிட்ட சில நபர்கள், தொழிலாளர்களிடம் தினமும் தலா ரூ.50-ஐ ‘கட்சி நிதி’ என்ற பெயரில் கட்டாயமாக வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வேலை செய்யும் இடத்தில் ஒருவரிடம் பணியாளர்கள் 2 பேர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு வழங்கும் ஊதியத்தில் கை வைக்கும் இந்தச் செயலுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
