இந்திய அரசியலில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலம் மக்கள் பிரதிநிதியாக அரசுப் பதவியில் நீடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

குஜராத் முதலமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமர் என இரு பதவிகளையும் சேர்த்து, இன்று (மார்ச் 22) 8,931 நாட்களை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பவன் குமார் சாம்லிங்கின் (8,930 நாட்கள்) நீண்ட காலப் பதவிக் கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராகப் பதவியேற்ற மோடி, அன்று முதல் இன்று வரை இடைவெளியின்றி 24 ஆண்டுகளுக்கும் மேலாக (சுமார் 25-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார்) அதிகாரத்தில் தொடர்ந்து வருகிறார்.

நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக அக்டோபர் 2001 முதல் மே 2014 வரை சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் 2014, 2019 மற்றும் 2024 ஆகிய மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று, தற்போது மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் அதிக காலம் முதலமைச்சராக இருந்து, பின்னர் பிரதமரானவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் அவர் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். “தேசத்திற்காக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் உழைக்கும் மோடியின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது” என அமித் ஷா புகழ்ந்துள்ளார். அரசியல் சாதனைகள் ஒருபுறமிருக்க, இம்மாத தொடக்கத்தில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 30 மில்லியன் சந்தாதாரர்களைக் கடந்து உலகத் தலைவர்களிலேயே முதலிடம் பிடித்துப் புதிய டிஜிட்டல் சாதனையையும் படைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version