கோபிசெட்டிபாளையம் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே உடற்பயிற்சி நிலைய திறப்பு விழாவில் லிப்ட் பழுதாகியதால் சிக்கிய 12 பேரை  தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

 கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனை அருகே   புதிய உடற்பயிற்சி நிலையம்  அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த உடற்பயிற்சி மையத்தினை வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து சென்றார்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தரைத்தளத்தில் இருந்து மேல் தளத்திற்குச் செல்வதற்காக  12 பேர் அங்குள்ள லிப்டில் ஏறியுள்ளனர்.

ஆனால், லிப்ட் இயங்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென நடுவழியில் நின்றுவிட்டது.

லிப்ட் திடீரென நின்றதோடு, அதன் கதவுகளும் திறக்காததால் உள்ளே இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே போதிய காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயமும் உருவானது.

உடனடியாக வெளியில் இருந்த ஊழியர்கள் லிப்டை இயக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

இது குறித்து உடனடியாக கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் இறங்கினர். முதற்கட்டமாக, லிப்டின் கதவுகளைச் சற்றே விலக்கியும், கதவுகளை உடைத்தும் உள்ளே இருந்தவர்களில் 12 பேரைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு உடனடியாக லிப்டில் இருந்தவர்களை வெளியேற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version