புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்களை அரசு செயலர் மற்றும் இயக்குனரிடம் வழங்கியபோதும் கடந்த 2 வருடமாக இயக்குனர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதால் சுகாதாரத்துறை இயக்குனருக்கு எதிராக மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, மருத்துவர்களுக்கு விடுமுறை வழங்காமல் பணிகளை மேற்கொள்ள சொல்வது, மருத்துவ விடுப்பு வழங்க மறுப்பது, மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரச்சனைகளை இயக்குனர் கண்டு கொள்ளாமல் இருப்பது, மருத்துவர் சங்கம் மூலம் இயக்குனரை பார்த்து கோரிக்கை வைக்க அனுமதி மறுப்பது, முதலமைச்சர் மற்றும் துறை செயலர் உத்தரவிட்டும் இயக்குனர் செய்ய மறுப்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கமிட்டி உருவாக்க வேண்டும் என கோரிக்கை அனைத்தும், சுகாதாரத்துறை இயக்குனர் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்போம் என தெரிவித்துள்ளனர். இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நோயாளிகள் ஒரு மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
