சென்னையின் நீண்டகால போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் மிக முக்கிய திட்டமான துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சுமார் 21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த உயர்மட்டச் சாலைத் திட்டம் ரூ.3,570 கோடி முதல் ரூ.5,770 கோடி வரையிலான மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இது நகரின் மையப் பகுதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தைத் தனியாகப் பிரித்து, உள்ளூர் வாகனங்களுக்கு சிக்னல் இல்லாத பயணத்தை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், துறைமுகம் முதல் கோயம்பேடு வரை இரு தள அமைப்பு. மேல் தளத்தில் 6 வழிப் பாதைகள் துறைமுக சரக்கு வாகனங்களுக்கு முழுமையாக ஒதுக்கப்படும். இதன் மூலம் துறைமுக கதவு எண் 10 (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி கூவம் ஆற்றின் கரையோரமாகச் செல்லும் கனரக லாரிகள் நகருக்குள் நுழையாமல் நேரடியாக மதுரவாயல் நோக்கிச் செல்ல முடியும். கீழ் தளத்தில் 4 வழிப் பாதைகள் உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இருக்கும். கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை ஒற்றைத் தளமாக தொடரும்.
மொத்தம் 13 இடங்களில் (7 ஏறும், 6 இறங்கும்) சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன. கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர்டேங்க் சாலை, கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் வாகனங்கள் எளிதாக ஏறி இறங்கும் வசதி உருவாக்கப்படுகிறது. சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலையில் நுழைவு, காமராஜர் சாலை மற்றும் ஸ்பர்டேங்க் சாலையில் வெளியேறும் பிரத்யேகப் பாதைகளும் தயாராகின்றன.
செம்பரம்பாக்கம் அருகே 64 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள யார்டில் பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் பாக்ஸ் கார்டர்கள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. 15 கி.மீ. தூரம் கூவம் ஆற்றின் போக்கைப் பின்பற்றி அமையும் இந்த மேம்பாலம், நகரின் உட்புறச் சாலைகளில் நெரிசலை பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பருவமழை காரணமாக சற்று தாமதமான பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தினசரி 16 மணி நேரம் பணி நடைபெறுகிறது. நவம்பர் 2027-க்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூர்த்தியானவுடன் தினசரி சுமார் 20,000 உள்ளூர் வாகனங்களும் 5,500 கனரக வாகனங்களும் பயன்படுத்தும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் உள்ளூர் வாகனப் போக்குவரத்து 52,000-ஐத் தாண்டும், துறைமுக சரக்குக் கையாளுதல் 200 மில்லியன் டன்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் சென்னையின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கிய வரப்பிரசாதமாக அமையும்.
இந்த மேம்பாலம் முடிவடைந்தால், சென்னையின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்; பயண நேரம் கணிசமாகக் குறையும்; துறைமுக செயல்பாடுகள் மேம்படும். நகரவாசிகளின் அன்றாட வாழ்க்கை எளிதாகும் என்பதில் சந்தேகமில்லை.
