மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
மும்பையில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, 13 நாட்கள் தாமதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தத் தாமதமான வருகை 1951-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக மோசமான தாமதங்களில் ஒன்றாகும். கடுமையான வெயில் மற்றும் உஷ்ணத்திலிருந்து இந்த மழை மக்களுக்குப் பெரும் நிவாரணத்தைத் தந்தாலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெய்த அதிதீவிர மழை ஒட்டுமொத்த மும்பை மாநகரையும் வெள்ளக்காடாக மாற்றியுள்ளது.
பத்தாண்டுகளில் இல்லாத பெருமழை
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மும்பை நகரின் பல பகுதிகளில் 300 மி.மீ-க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகப் பிரஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக, தெற்கு மும்பையில் மட்டும் 248 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் ஜூன் மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழையாகும். 204.4 மி.மீ-க்கு மேல் பதிவாகும் மழையை ‘மிகக் கடுமையான மழை’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வகைப்படுத்தியுள்ளது.
முடங்கிய போக்குவரத்து
நேற்றிரவு முழுவதும் இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால், புதன்கிழமை காலையில் மும்பையின் பெரும்பாலான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. மத்திய மற்றும் மேற்கு புறநகர் ரயில் பாதைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பான தாதர் ரயில் நிலையம் முற்றிலும் நீரில் மூழ்கியது. சாகி நாக்கா போன்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

மேலும், அந்தேரி சுரங்கப்பாதையில் ஆபத்தான அளவுக்கு நீர் தேங்கியதால் அது தற்காலிகமாக மூடப்பட்டது. எச்சரிக்கைகளையும் மீறிச் சென்ற சில வாகனங்கள் தண்ணீரில் சிக்கிய போது, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு வாகன ஓட்டிகளைப் பத்திரமாக மீட்டனர். விக்ரோலி மேற்குப் பகுதியில் குடியிருப்பு ஒன்றின் அருகே இருந்த தடுப்புச் சுவரும், தாதர் பகுதியில் கார் ஒன்றின் மீது மரமும் விழுந்து சேதங்களை ஏற்படுத்தின.
ஆரஞ்சு அலர்ட்
மழையின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மும்பை மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (சிவப்பு எச்சரிக்கை) விடுத்தது. பின்னர் காலை 7 மணிக்கு அது ‘ஆரஞ்சு அலர்ட்’ ஆக மாற்றப்பட்டது.
மும்பை, தானே, ராய்கட், பால்கர் மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் தீவிரமான மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குப் பலத்த மழை தொடரும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
