தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமினும், மற்றொருவருக்கு முன் ஜாமினும் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க, ரூ.35 கோடி தருவதாக சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் இதுவரை 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கடந்த 14-ம் தேதி கைது செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் ஜாமின் கோரியும், கரூரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் முன்ஜாமின் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முழுமையான ஆதாரங்கள் எதுவுமின்றி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தயார் என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் மற்றும் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மறு உத்தரவு வரும் வரை மனுதாரர்கள் இருவரும் தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணி ஆகிய இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை எக்காரணம் கொண்டும் கலைக்கக் கூடாது, காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி இளந்திரையன் நிபந்தனை விதித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version