போராட்டங்களை கலைக்க காவல்துறையினர் பயன்படுத்தும் பெலட் துப்பாக்கிகளை (Pellet Guns) முற்றிலும் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் உளவுத்துறை (IB) சிறப்பு இயக்குநர் யசோவர்தன் ஆசாத் மற்றும் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பெலட் காயமடைந்த இருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
விசாரணையின் போது நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, “விதிவிலக்கான சூழல்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெலட் துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறை விதிமுறைகள் அனுமதிக்கின்றன. அந்த விதிமுறைகளையே அரசியலமைப்புச் சட்டம் 21-க்கு முரணானவை என சவால் செய்யாமல், பெலட் துப்பாக்கிகளுக்கு முழுமையான தடை கோர முடியாது” என்று தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர், ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பெலட்டுகள் அல்லாமல், மெட்டாலிக் பெலட்டுகள் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதாகவும், அவை காயமடைந்தவர்களின் உடலிலிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான காவல்துறை நடைமுறை (SOP) ஆவணத்தில் பெலட் துப்பாக்கி பயன்பாடு இடம்பெறவில்லை என்றும் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிமன்றம், “அமைதியான மாணவர் போராட்டங்களுக்கு எதிராக வன்முறையை ஆதரிக்க முடியாது என்றாலும், சில சூழல்களில் காவல்துறைக்கு படிப்படியான (Graded Response) நடவடிக்கைகள் தேவைப்படலாம். எனவே, போராட்டங்களை கலைக்க காவல்துறையினர் பயன்படுத்தும் பெலட் துப்பாக்கிகளை முற்றிலும் தடை செய்ய முடியாது. அதே சமயம், பெலட் துப்பாக்கி பயன்பாட்டுக்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்க கோரிக்கை விடுக்கலாம்” என்றும் அறிவுறுத்தியது.
மேலும், ஜூலை 20-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பதிவேடுகளை பாதுகாத்து வைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை டெல்லி அரசு உறுதி செய்யவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
