திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் நடைபெற்ற சமுதாய நலக்கூடத் திறப்பு விழாவில், திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அப்பகுதி மக்கள் மத்தியில் வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“இந்தக் குருகாட்டூரில் எனக்கு 430-க்கும் அதிகமான வாக்குகள்தான் கிடைத்துள்ளன. ஆனால், யாருன்னே தெரியாத தவெக வேட்பாளருக்கு 400 வாக்குகளுக்கு மேல் அளித்துள்ளீர்கள். எங்களுடைய முதலமைச்சரும், எம்பி கனிமொழியும் உங்களுக்காக எவ்வளவோ திட்டங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால், என்னை விட அந்தப் புதிய வேட்பாளருக்கு எப்படி இவ்வளவு வாக்குகள் கொடுக்க முடிந்தது? இதைக் கேட்பதற்காகத்தான் நான் நேரில் வந்தேன்” என்று அவர் குறிப்பிட்டுக் கேட்டார்.

தொடர்ந்து குரங்கணி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்காக எம்ஜிஆர் தன் சொந்தப் பணத்தை வாரி வழங்கினார். ஆனால், தற்போதுள்ள ஜோசப் விஜய் மக்களுக்காக ஒரு ரூபாயாவது சொந்தச் செலவு செய்திருப்பாங்களா? வெறும் விளம்பரத்துக்காகவோ அல்லது முழங்காலில் நடந்து சென்றதையோ பார்த்துவிட்டா வாக்களித்தீர்கள்?” என்று அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கினோமா இல்லையா? ஊரில் கோவில் திருவிழாக்கள் எந்தவிதத் தடையுமின்றி நடைபெற பல்வேறு உதவிகளைச் செய்த எனக்குத்தானே நீங்கள் முழுமையாக வாக்களித்திருக்க வேண்டும்? பாஜகவுக்கு வாக்களித்தால் அந்தக் கட்சி இங்கு வெற்றிபெறப் போகிறதா?” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

கடந்த முறை தேர்தலில் ஏமாற்றிவிட்டீர்கள்; தவெகவின் சின்னத்தைப் பார்த்து வாக்களித்துவிட்டு இப்போது இரவில் முழித்துக்கொண்டிருப்பதாக நீங்களே பேசுகிறீர்கள். விரைவில் மீண்டும் ஸ்டாலின் முதல்வராகிவிடுவார். என் சொந்தக்காரர்கள் இருக்கும் வாக்குச்சாவடியிலேயே எனக்குக் குறைவான வாக்குகள் விழுந்தால் நான் என்ன செய்வது? எங்களை இந்த அளவுக்குப் சிரமப்படுத்தாதீர்கள். இனிவரும் காலங்களிலாவது எங்களுக்கு முழு ஆதரவளித்துக் காப்பாற்றுங்கள்” என்று அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version