மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரின் குடும்பத்தினர் இது ‘ஆணவக்கொலை’ என குற்றம் சாட்டியுள்ளதால் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பார்த்திபன் (19). கொத்தனார் வேலை செய்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரும், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்குத் தெரியவந்ததை அடுத்து, இரு குடும்பங்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பார்த்திபனின் பெற்றோர், பெண் வீட்டார் மீது பொறையார் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும், திவ்யதர்ஷினியும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இன்று காலை இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஏடிஎஸ்பி சுரேஷ் மற்றும் டிஎஸ்பி சரவணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். உடல்களை மீட்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் பேசிய போலீசார், உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்களது மகனைப் பெண் வீட்டாரே அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகப் பார்த்திபனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், சிறுமியின் உறவினர்களின் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். இச்சம்பவம் தற்கொலையா அல்லது ஆணவக்கொலையா என்ற கோணத்தில் பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version