கத்தாரின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றான ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் (Ras Laffan Industrial City) அமைந்துள்ள பர்சான் (Barzan) எரிவாயு ஆலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூன் 21) ஒரு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இந்த கோர விபத்தில் இதுவரை 54 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 18 ஊழியர்களைக் காணவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்தது எப்படி? கடந்த மார்ச் மாதம் பிராந்திய மோதல்களின் போது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் இந்த ராஸ் லஃப்பான் ஆலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது ஹோமுஸ் நீரிணைப் பகுதியில்  பதற்றம் தணிந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளன. அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட செயல்பாட்டு கோளாறு காரணமாக ஆலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

“ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முற்பட்ட போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. பர்சான் ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்கால மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, தற்போது தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்” என்று அரசுக்குச் சொந்தமான கத்தார் எனர்ஜி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கத்தார் நாட்டின் உள்நாட்டு மின்சார உற்பத்தி மற்றும் பாலைவனப் பகுதிகளில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் முக்கிய ஆலைகளுக்கு தேவையான எரிவாயுவை இந்த பர்சான் ஆலைதான் வழங்கி வருகிறது. தினமும் 1.4 பில்லியன் கன அடி எரிவாயு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, கத்தாரின் உள்நாட்டுத் தேவையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புக்குழுவினர் காணாமல் போன 18 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து கத்தார் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version