விழுப்புரம் அருகே அதிகாலையில் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக் கூறி, ஆம்னி பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்து, ஓட்டுநர்களை போதை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து 45 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்போது மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு சாலை குறுகலாக இருந்ததால், அனைத்து வாகனங்களும் மெதுவாகவே செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவியது.
அப்போது, ஆம்னி பேருந்திற்கு பின்னால் இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். குறுகிய சாலை என்பதால் பேருந்து உடனடியாக வழிவிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், திடீரென ஆம்னி பேருந்தை முந்திச் சென்று வழிமறித்தது.
பேருந்தை நிறுத்திய அக்கும்பல், ஓட்டுநர்களை நோக்கி தகாத வார்த்தைகளால் வசைபாடியது. அத்துடன் நிறுத்தாமல், சாலையோரம் இருந்த கற்களை எடுத்து ஆம்னி பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
மேலும், பேருந்தின் ஓட்டுநர்களான பிரவீன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் வம்புக்கு இழுத்து, சரமாரியாகக் கொடூரமாகத் தாக்கினர். போதை தலைக்கேறிய நிலையில் அக்கும்பல் நடத்திய இந்த வன்முறையைக் கண்டு பேருந்தில் இருந்த 45 பயணிகளும் அச்சத்தில் உறைந்தனர்.
இதுகுறித்து பேருந்து பயணிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர், படுகாயமடைந்த ஓட்டுநர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய அந்த 8 பேர் கொண்ட போதை கும்பலை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்து மூலம் பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
