தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட மூவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் சிலர் தொலைபேசி மூலம் பேரம் பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நரேஷ், ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவல்லிக்கேணி போலீசார் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், மனுவுக்கு பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட மூன்று பேர் தரப்புக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அன்றைய தினம், மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் எனத் தெரிகிறது.
