தென்காசி மாவட்டம், ஆயிரப் பேரி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). மனைவியை பிரிந்து வாழும் இவருக்கும், இலஞ்சி பகுதியை சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே பேக்கரியில் வேலை செய்யும் போது கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இந்த நிலையில், வித்யாவை சுதாகர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு வித்யா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். குறிப்பாக, வித்யாவிற்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தொடர்ந்து வித்யாவை, சுதாகர் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த நிலையில், அவரது வீட்டிற்கும் சென்று பிரச்சினை செய்துள்ளார்.
இந்த நிலையில், வித்யாவின் கணவரான மாரியப்பன் என்பவருக்கும், சுதாகருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இன்றைய தினம் சுதாகர் மாரியப்பனை செல்போனில் தொடர்பு கொண்டு இன்று பேசி ஒரு முடிவு எடுத்துக் கொள்வோம் என மாரியப்பனை நேரில் அழைத்த நிலையில், மாரியப்பன் இலஞ்சி பகுதிக்கு சுதாகரை வரும்படி கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் சுதாகர் இலஞ்சி பகுதிக்கு வருகை தந்த நிலையில், ஒரு தோட்டத்தில் சுதாகரனும், மாரியப்பனும் பேசிக் கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்படவே மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாகரை குத்தி கொலை செய்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்கவே உடனடியாக மாரியப்பன் குற்றாலம் காவல் நிலையத்திற்கு சென்று தான் கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.
இந்த நிலையில், மாரியப்பனை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் நேரில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
