மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த இந்த வழக்கில், டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி அஸ்வினி பன்வார் தீர்ப்பளித்து, பிரிஜ் பூஷன் மற்றும் இணை குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமர் ஆகிய இருவரையும் விடுதலை செய்தார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மல்யுத்த வீராங்கனைகளிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அமைப்பும் அரசாங்கமும் பிரிஜ் பூஷனைக் காப்பாற்ற முயன்றதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வினேஷ் போகத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நாங்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டியிருந்தது. தனது அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்தி, பல பெண்களின் பெயர்களை வாபஸ் பெறச் செய்ய பிரிஜ் பூஷன் மிரட்டினார். இருப்பினும், பல பெண் மல்யுத்த வீராங்கனைகள் உறுதியாக நின்று நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடினர். பெண் மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த பாலியல் வன்முறை புகார்களில் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கை நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்டறியவில்லை என்பதில் எங்களுக்கு ஆழமான வருத்தம் உள்ளது. முதல் நாளிலிருந்தே ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், அரசாங்கமும், இந்த அமைப்பும் பிரிஜ் பூஷனைக் காப்பாற்றவே செயல்பட்டு வந்துள்ளன” என்று வினேஷ் போகத் தெரிவித்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு வெடித்த இந்த விவகாரத்தில், டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி அதே ஆண்டுூன் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பல இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய தீர்ப்புடன் போராட்டம் முடிந்துவிடவில்லை என்றும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

“இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு பெண் மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர், விரைவில் அது தாக்கல் செய்யப்படும். நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை, மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வார்கள்” என்று அந்த அறிக்கையில் முடிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version