எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினருக்கு இன்று( 06.02.2016 ) முதல் விருப்ப மனு விநியோகத்தை பிரேமலதா விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “ கூட்டணி குறித்து தற்போது வரை பல கட்சிகள் பேசி வருகின்றன. இருப்பினும், உரிய நேரத்தில் தேமுதிகவின் அதிகாரப்பூர்வமான கூட்டணி முடிவை அறிவிப்பேன்” என்றார். ”விஜயகாந்தின் ஆசீர்வாதத்துடன் இந்த தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெறும் என்றும், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்” என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
” அனைத்து கட்சிகளுமே தேமுதிகவுக்குத் தோழமை கட்சிகள்தான். அனைவரும் நட்புறவோடு பேசி வருகிறார்கள். ஆனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பும், அதே சமயம் மக்களும் ஏற்கும் கூட்டணியை அமைப்போம்” என்றார்.
” மார்ச் முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கூட்டணி முடிவை அறிவிப்போம்” என்று அவர் உறுதியளித்தார். ” சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கோ அல்லது ஊகங்களின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கோ நான் பதில் அளிக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனவும் பிரேமலதா கூறினார்.
