ந்தியாவில் டெங்கு தடுப்புக்கான முதல் தடுப்பூசியாக ஜப்பானின் டகேடா பயோஃபார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் Qdenga தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசி DENV-1, DENV-2, DENV-3, DENV-4 என டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமோ, தடுப்பூசி செலுத்துவதற்கு முன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையோ இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

தோலுக்கு அடியில் (Subcutaneous) செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, 0.5 மில்லி அளவில் இரண்டு டோஸ்களாக, மூன்று மாத இடைவெளியில் வழங்கப்படும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஆண்டுக்கு 5 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த Biological E நிறுவனத்துடன் டகேடா ஒப்பந்தம் செய்துள்ளதால், இந்திய சந்தையில் போட்டித்தன்மை கொண்ட விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19 கட்ட மருத்துவ ஆய்வுகளில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட 12 மாதங்களுக்குப் பிறகு 80.2% செயல்திறன், டெங்கு காரணமான மருத்துவமனை அனுமதியைத் தடுக்க 90.4% செயல்திறன் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.5 ஆண்டுகளுக்குப் பிறகும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதில் 84.1% பாதுகாப்பு அளித்ததுடன், 7 ஆண்டுகள் வரை பாதுகாப்பு நீடிப்பதும் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2022-ல் அறிமுகமான Qdenga தடுப்பூசிக்கு இதுவரை 43 நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. உலகளவில் 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்தகுதி (Prequalification) வழங்கியுள்ளதால், சர்வதேச சுகாதார அமைப்புகள் மூலமாகவும் இந்த தடுப்பூசியை விநியோகிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த இருபதாண்டுகளில் டெங்கு பாதிப்பு 11 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த தடுப்பூசி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version