ப்பானின் E10 ஷின்கன்சென் அதிவேக ரயிலை 2034-க்கு முன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், இந்தியா தனது புல்லட் ரயில் திட்டத்தில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

மும்பை–அகமதாபாத் 508 கி.மீ. அதிவேக ரயில் திட்டத்திற்காக ஜப்பானிலிருந்து ஷின்கன்சென் ரயில், சிக்னலிங் அமைப்பு மற்றும் ஆபரேஷன் கண்ட்ரோல் சென்டர் (OCC) ஆகிய மூன்று முக்கிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட இருந்தன. ஆனால் E10 ரயில் இன்னும் வடிவமைப்பு நிலையில் இருப்பதால், அதற்கான விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்களைக் கூட ஜப்பான் தரப்பால் வழங்க முடியவில்லை என்று ரயில்வே அமைச்சக உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனால், திட்டத்தை மேலும் தாமதப்படுத்தாமல் முன்னெடுக்க இந்தியா தனது சொந்த புல்லட் ரயிலை உருவாக்க முடிவு செய்துள்ளது. மேலும், கொரியா, தைவான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ETCS (European Train Control System) என்ற சர்வதேச சிக்னலிங் முறையை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜப்பானின் ஆளும் லிபரல் டெமோக்ராட்டிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹிடேகி மாகிஹாரா, இந்தியாவின் முடிவை விமர்சித்து, “புல்லட் ரயில் திட்டத்தின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சிக்னலிங் அமைப்பில் இருந்து ஜப்பான் வெளியேற்றப்பட்டுள்ளது” என சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

ஆனால் இந்திய அதிகாரிகள், ஜப்பானின் தாமதமே இந்த முடிவுக்கு காரணம் என்றும், திட்டத்தை 2027-ஆம் ஆண்டிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பதால் உள்நாட்டு ரயிலும், உலகத் தரத்திலான திறந்த சிக்னலிங் தொழில்நுட்பமும் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version