இந்தியா, நியூசிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தகம் வரும் 2030க்குள் இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய பயணத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து சென்ற அவருக்கு, ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, ஆக்லாந்தில் நடைபெற்ற வர்த்தக மற்றும் விளையாட்டுத்துறை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே 9 மாத காலத்திற்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இது இருநாட்டு சந்தை அணுகல், முதலீடு, சேவைகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா- நியூசிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நியூசிலாந்து முன்வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த முதலீடு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் நியூசிலாந்தின் ஈடுபாட்டை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையே அணுசக்தி மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version