ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஈரான் தூதரகத்தின் துணைத் தூதரகத் தலைவரை (Deputy Chief of Mission) அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை தற்போது பதற்றத்தின் மையமாக மாறியுள்ளது.
அனுமதியின்றி பயணித்ததாகக் கூறப்படும் கப்பல்களை தடுத்து நிறுத்தியதுடன், ஹோர்முஸ் வழியாக அனைத்து கப்பல் போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாக நடைபெறுவதால், இந்த நடவடிக்கை உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக, ஈரானின் ராணுவ இலக்குகள் மீது மேலும் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வணிகக் கப்பல்களை தாக்கும் ஈரானின் திறனை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரான் அரசின் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, பந்தர் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவு உள்ளிட்ட தெற்கு துறைமுக நகரங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் ராணுவத்தினருக்கு உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலின் தாக்கம் கத்தார், குவைத், பஹ்ரைன், ஜோர்டான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், கத்தார் இதை “மிகவும் ஆபத்தான பதற்ற அதிகரிப்பு” என கண்டித்துள்ளது. தனது எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகக் கூறி, ஓமன் ஈரானிடம் அதிகாரப்பூர்வ எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, உடனடியாக போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு இரு தரப்பையும் வலியுறுத்தியுள்ளது.
இந்த மோதல் காரணமாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கடும் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. கடந்த மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் மீறப்பட்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை வாயில்களை திறந்தவண்ணம் வைத்திருக்க ஓமன் மற்றும் கத்தார் தொடர்ந்து தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
